PUBLISHED ON : செப் 05, 2026 01:05 AM

செப்டம்பர் 5:
நாகப்பட்டினத்தில், திருமலை நம்பி அய்யங்கார் -- திருவேங்கடவல்லி அம்மாள் தம்பதியின் மகனாக, 1948ல் இதே நாளில் பிறந்தவர், டி.என்.சேஷகோபாலன்.
இவர், சிறு வயதிலேயே தன் தாயிடமும், ராமநாதபுரம் சி.எஸ்.சங்கரசிவனிடமும் இசை பயிற்சி பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., முடித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கர்நாடக இசை பிரிவில் பட்டம் பெற்று, அங்கு இசை பேராசிரியராக பணியாற்றினார்.
வாய்ப்பாட்டு தவிர வீணை, ஹார்மோனியம் ஆகிய கருவிகளை வாசிப்பதிலும், ஹரிகதா சொல்வதிலும் வல்லவர். இவர் சுயமாகவே, தில்லானா, பஜன், நாமாவளிகளை இயற்றியுள்ளார். ஹிந்துஸ்தானி ராகங்களிலும் தேர்ச்சி பெற்ற இவர், தோடி ராகம் திரைப்படத்தை தயாரித்து, நடித்தார்.
ஜாம்பவான் என்ற படத்தில் பிரசாந்தின் தந்தையாக நடித்தார். ஆத்மா திரைப்படத்தில், 'இன்னருள் தரும்' என்ற பாடலை பாடினார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடந்த சர்வதேச திருவிழாவில் பாடிய இவர், ரஷ்யாவுக்கான இந்தியாவின் கலாசார துாதராகவும் நியமிக்கப்பட்டார்.
'பத்ம பூஷண், சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவருக்கு, இன்று 78வது பிறந்த தினம்!
