PUBLISHED ON : ஆக 11, 2026 12:00 AM

ஆகஸ்ட் 11: மலேஷியாவில் வசித்து, இரண்டாம் உலகப்போரின்போது, தமிழகம் வந்த கிருஷ்ணன் என்பவரது மகனாக, 1940ல் இதே நாளில் பிறந்தவர், கி.லோகநாதன்.
உலகப்போர் முடிந்ததும், இவரது குடும்பம் மீண்டும் மலேஷியா சென்றது. இவர், சரஸ்வதி தோட்டத் தமிழ்ப் பள்ளி, பினாங்கில் இருந்த பள்ளிகளில் படித்தார். பின், நியூசிலாந்து ஒதாகோ பல்கலையில் கணிதம், தத்துவ துறைகளில் பட்டம் பெற்று, விரிவுரையாளராக பணியாற்றினார்.
மனநல ஆராய்ச்சியில் சைவ சித்தாந்தக் கூறுகளை உட்புகுத்தி, 'ஆகமிய உளவியல்' என்ற புதிய துறையை உருவாக்கினார். சைவ சித்தாந்த நுாலான சிவஞானபோதத்தை ஆழ்ந்து ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுதினார்.
'சுமேரா- தமிழ்' என்ற தலைப்பில், தமிழையும், சுமேரிய மொழியையும் ஒப்பிட்டு ஆய்வுகளை செய்தார். தன் ஆய்வுகளையும், சைவ சித்தாந்த கோட்பாடுகளையும் பரப்ப, 'உலகனார் ஆகம அறிவியல் மையம்' என்ற அமைப்பை நிறுவிய இவர், தன் 74வது வயதில், 2015, ஏப்ரல் 17ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
