PUBLISHED ON : ஆக 10, 2024 12:00 AM

இது அவருக்கு தெரியாதா ..
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருணா தலைமையில் நடந்த விவசாயிகள்குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, விவசாயி ஒருவர்
கலெக்டரை பாராட்டும் வகையில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுநாள் வரை கலெக்டராக வருவோர்,வேறு இடத்திற்கு பணிமாறுதலில் செல்லும் போது, துறை செயலராகவும், இயக்குனராகவும் செல்கின்றனர். ஆனால், நீங்கள் பணி மாறுதல் பெற்று செல்லும் போதும், ஒரு கலெக்டராக தான் செல்ல வேண்டும்' என்றார்.குறுக்கிட்ட கலெக்டர், 'நான் இங்கு பணிக்கு வந்தே ஐந்து நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் என்னை பணி மாறுதலில் செல்ல வாழ்த்து தெரிவிக்கிறீர்களே...' என கேட்டதும், அனைவரும் சிரித்தனர்.
மூத்த நிருபர் ஒருவர், 'விவசாயி விபரம் இல்லாம பேசுறார்... மாவட்ட கலெக்டரா இருந்து துறை இயக்குனரா போனா, அது புரமோஷன் தான்னு அவருக்கு தெரியாதா...?' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
