PUBLISHED ON : செப் 22, 2011 12:00 AM

'நல்லவேளை தப்பிச்சோம்...!'
சென்னை தி.நகர், சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில், சமூக நலச்சங்க துவக்க விழா நடந்தது.
விழாவில், மாநில அளவில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இதில், செய்தித் துறை அமைச்சர் செந்தமிழன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ரமணா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி துவங்கியதும் ஒருங்கிணைப்பாளர், 'அமைச்சர் செந்தமிழன் வராததால், அமைச்சர் ரமணா பரிசுகளை வழங்குவார்' என்றார். அவர் கோப்பைகளை வழங்கிவிட்டு, அரங்கில் இருந்து வெளியேறினார். பின், திடீரென அமைச்சர் செந்தமிழன் அரங்கிற்குள் வர, என்ன செய்வதன்று தெரியாமல் நிர்வாகிகள் திகைத்தனர். மாணவர்களிடம் கொடுத்த கோப்பைகளை வாங்கி திரும்பவும், மாணவர்களுக்கு அமைச்சரை கொடுக்க வைத்தனர். இதைப் பார்த்த மாணவி ஒருவர், 'நல்ல வேளை... இன்னும் ரெண்டு அமைச்சர்கள் வர்றதா இருந்தா, ஒரே கோப்பையை நாலு தடவை வாங்க வேண்டியது வந்திருக்கும்...' என, 'கமென்ட்' அடித்ததும் அங்கு சிரிப்பலை எழுந்தது.
'புது கோஷ்டி கிளம்பிடாதா...?'
கடலூரில் நடந்த மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., அழகிரி பேசும்போது, 'மத்திய அரசு, பஞ்சாப், அரியானா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஒரு கிலோ அரிசியை, 19 ரூபாய்க்கு வாங்கி, அந்தியோதயா திட்டம் மூலம், 16 ரூபாய் மானியம் கொடுத்து, மாநில அரசுகளுக்கு மூன்று ரூபாய்க்கு வழங்குகிறது. முன்னாள் முதல்வர் இரண்டு ரூபாய் மானியம் கொடுத்து ஒரு ரூபாய்க்கு வழங்கினார். தற்போதைய முதல்வர், 3 ரூபாய் மானியம் கொடுத்து இலவசமாக வழங்குகிறார். இரு முதல்வர்களுமே, 16 ரூபாய் மானியம் கொடுத்த பிரதமருக்கு நன்றி சொன்னார்களா...? 'பாமாயிலுக்கும் மத்திய அரசு முழு மானியம் தருகிறது. அவர்கள் ரேஷன் அரிசி வழங்கும் பைகளில், ஒரு பக்கத்தில் முதல்வர் படம் போட்டுள்ளனர். மானியம் வழங்கிய பிரதமர் மன்மோகன் சிங் படத்தை மறு பக்கத்தில் போட்டால் என்ன...?' என, கேட்டார். கூட்டத்தில் இருந்த ஒரு காங்., தொண்டர், 'இதென்ன வம்பா போச்சு... சோனியா படம் போடலைன்னு ஒரு கோஷ்டி கிளம்பிடாதா...?' என, 'கமென்ட்' அடித்ததும் அனைவரும் சிரித்தனர்.