PUBLISHED ON : ஜூன் 02, 2024 12:00 AM

கோவையில் உள்ள, 1,145 ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து, புதிய பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'ஓயாசிஸ்' நிறுவன பொது மேலாளர் தியாகமூர்த்தி புதிய இயந்திரங்களை வழங்கி, அதை இயக்குவது பற்றி பயிற்சி அளித்தார்.
அப்போது, 'நீங்கள் பில் போட்டவுடன் குறுஞ்செய்தி, வாடிக்கையாளர் மொபைல் போனுக்கு செல்லும் போது பிரின்ட் ஆகி ரசீது வந்துவிடும். ரசீது ரோல்கள் பண்டக சாலையில் இருந்து மாதந்தோறும் பொருட்களை அனுப்பி வைக்கும் லாரியில் வந்துவிடும்' என்றார்.
ஊழியர் ஒருவர், 'ரேஷன் பொருள் வினியோக முறை நவீனமாவது சந்தோஷம் தான்... அதே மாதிரி ரேஷன் பொருட்களை தரமாக அனுப்பி வச்சா, மக்களிடம் நாங்க வாங்கி கட்டிக்கிறது குறையுமே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர் ஆமோதித்து தலையாட்டினார்.

