PUBLISHED ON : மார் 23, 2024 12:00 AM

சமீபத்தில், சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.,வில் இணைந்த நடிகர் சரத்குமார், கன்னியாகுமரியில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், 'பா.ஜ., மேடையில் இது என் கன்னி பேச்சு. 57 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் இருக்கின்றன. திராவிடம் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர்.
'தலைவர், மகன் என அடுத்தடுத்து அவர்களுக்கு எழுந்து வணக்கம் போட்டே தி.மு.க.,வினர் 'டயர்டா' போயிட்டாங்க. நான் தி.மு.க.,வில் இருந்தபோது, 2004 லோக்சபா தேர்தலில் 40 தொகுதியும் நமதே என்றேன். சாத்தியமா என கருணாநிதி கேட்டார். ஆனால், அதுதான் நடந்தது' என்றார்.
பா.ஜ., தொண்டர் ஒருவர், 'தி.மு.க.,வில் இருந்தப்ப, 40ம் நமதேன்னு சொன்னவர், இப்ப பா.ஜ.,வும் 40ஐயும் பிடிக்கும்னு அடிச்சு சொல்ல மாட்டேங்கிறாரே... அதுல, அவருக்கே நம்பிக்கை இல்லையோ' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

