PUBLISHED ON : மே 10, 2024 12:00 AM

சென்னையில் நடந்த பட விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகாவிடம், 'அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா?' என, ஒரு நிருபர் கேள்வி எழுப்ப, 'என்னை யாரும் அரசியலுக்கு வரும்படி அழைக்கவில்லை. என் இரண்டு குழந்தைகளும் படிக்கின்றனர். அவர்களையும், நடிப்பையும் சமநிலையில் பார்த்து வருகிறேன். அரசியலுக்கு வரும் வாய்ப்பே இல்லை' என்றார்.
மற்றொரு நிருபர், 'நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது பற்றி உங்கள் கருத்து?' என கேள்வி எழுப்ப, 'அவுட் ஆப் தி டாபிக்' என்றார். கடைசியாக ஒரு நிருபர், 'சமூக கருத்து எல்லாம் பேசுறீங்க... ஏன் ஓட்டு போட வரவில்லை?' என கேள்வி கேட்க, 'நான் வருஷா வருஷம் ஓட்டு போடுவேன். சில நேரம் ஊரில் இல்லாமல் போவதுண்டு. தனிப்பட்ட விஷயமும் இருக்கலாம்' என, பதிலளித்தார்.
இளம் நிருபர் ஒருவர், 'வருஷா வருஷமா தேர்தல் நடக்குது...' என கேட்க, மற்றொரு நிருபர், 'நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் நடத்துற தேர்தலை எல்லாம் சேர்த்து சொல்றாங்க போல...' என்றபடியே கிளம்பினார்.