PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கோவை வரும் போதெல்லாம், விமான நிலையத்தில் அவரும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் சேர்ந்து செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.
ஆனால், கடந்த முறை பழனிசாமி, கணபதியிலும், வேலுமணி விமான நிலையத்திலும் தனித்தனியாக அரை மணி நேர இடைவெளியில் செய்தியாளர்களை சந்தித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்ப, 'தினமலர்' நாளிதழ் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்த வேலுமணி, 'எங்களை சீண்டுவதே தினமலர் பேப்பருக்கு பொழுது போக்காகி விட்டது' என்றார்.
இதே வேலுமணி தான், தி.மு.க., பற்றி தினமலர் நாளிதழில் எழுதும் செய்திகளை ஆதாரமாக குறிப்பிட்டு, பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவர் சொல்றது, இந்த கைப்புள்ளயை சீண்டுறதே கட்டதுரைக்கு வேலையா போச்சு'ன்னு வின்னர் படத்துல வர்ற வடிவேலு காமெடி மாதிரி இருக்கே...' என, கிண்டலடித்து சிரித்தார்.

