PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரதான கட்சிகள் போட்டியிடாததால், களம் மந்தமாகவே இருந்தது. தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாருக்கு பிரசாரம் செய்ய, மற்ற மாவட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை.
ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ், அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெங்கடாசலம் ஆகியோர் கூட ஓரிரு நாட்கள் மட்டும் தலைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்; அமைச்சர் முத்துசாமி மட்டுமே களத்தில் சுற்றி வந்தார்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வெற்றிச் சான்றிதழை சந்திரகுமார் வாங்கிய நிகழ்விலும் முத்துசாமி பங்கேற்காமல், கல்லுாரிக்கு வெளியே பேட்டி தந்துவிட்டு கிளம்பி விட்டார்.
இதனால், சந்திரகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். 'நம்ம அண்ணன் தே.மு.தி.க.,வில் இருந்து வந்தாலும், எல்லாரும் அரவணைச்சுப் போவாங்கன்னு பார்த்தோம்... ஆனா, இங்க ஆரம்பமே சரியில்லையே...' என, முணுமுணுத்தபடியே கலைந்தனர்.

