PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வி துறை இணைந்து நடத்திய, 'கல்லுாரி கனவு- -- உயர்கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சியில், கலெக்டர் லெட்சுமிபதி, மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக இயக்குனர் விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், விஞ்ஞானி பேசுகையில், 'பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு மேலே செல்லும் ராக்கெட்டை போன்றவர்கள் தான் முதல் தலைமுறை பட்டதாரிகள். உங்களது குடும்பத்தை முன்னேற்றுவதற்கான பாக்கியம், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கிடைத்துள்ளது. வேகம், உத்வேகம் சீராக அமைந்தால் வாழ்க்கையில் உன்னதமான இடத்தை அடைவீர்கள்' என்றார்.
இதைக் கேட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், பக்கத்தில் இருந்த மாணவரிடம், 'இதுநாள் வரைக்கும் விளையாட்டு பிள்ளையா பேப்பர்ல ராக்கெட் விட்டுட்டு இருந்த... விஞ்ஞானி சொல்ற மாதிரி ஒழுங்கா படிச்சு, அவரை மாதிரி நிஜ ராக்கெட் விட பாருப்பா...' என, அறிவுரை வழங்கி புறப்பட்டார்.