PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள், பெண்கள் மட்டும் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தால், பஸ்களை நிறுத்தாமல் செல்வதாக புகார் உள்ளது. இதற்கு, அரசு தங்களுக்கு கொடுத்துள்ள இலவச பயண சலுகை தான் காரணம் என, பெண்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து, திருப்பூர் பஸ் டிப்போ அதிகாரிகளிடம், சமூக ஆர்வலர்கள் சிலர் நேரில் சென்று புகார் அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், 'டிரைவர், கண்டக்டர்களிடம் நாங்கள் பலமுறை எச்சரித்து விட்டோம். அவர்கள் நிறுத்தவில்லை என்றால், நாங்கள் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புக்கும் சென்றா கண்காணிக்க முடியும்...?' என, அலட்சியமாக பதில் அளித்தனர்.
இதைக் கேட்ட சமூக ஆர்வலர் ஒருவர், 'இது பொறுப்பான பதில் இல்லையே சார்... அப்ப, ஒவ்வொரு ஊர்லயும் பஸ்சை சிறைபிடிச்சு போராட்டம் நடத்துனா தான் சரி வருமா...?' என, ஆதங்கத்தை கொட்டியபடி அங்கிருந்து நகர்ந்தார்.

