PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ., பேரவை சார்பில், திருப்பூர் வடக்கு தொகுதியில் திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர், துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி, தி.மு.க., ஆட்சியை விமர்சித்து பேசினர்.
ஜெயராமன் பேசும்போது, 'திருப்பூர் மாவட்டத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. பல்லடத்தில், மூன்று பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு, அப்பாவிகளை மிரட்டுகின்றனர். அனுதினமும் பாதிக்கப்படும் பெண்கள், 'ஐயோ... அப்பா...' என்று கதறுகின்றனர்.
'இதை, 'பாசத்துடன் என்னை அப்பா என்று அழைக்கின்றனர்' என, முதல்வர் கூறுவது, 21ம் நுாற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவையாக இருக்கிறது' என்றார்.
அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'டாஸ்மாக் கடையிலும் கூடுதலா 10 ரூபாய் கேட்குறதால, அங்கேயும் அடேங்கப்பான்னு தான் புலம்புறாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, அங்கு சிரிப்பலை பரவியது.

