PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

சென்னை, ஆவடி, காமராஜர் நகர், கணபதி கோவில் தெருவில் இருந்த, 40 அடி மழைநீர் வடிகால், ஆக்கிரமிப்புகளால், ஐந்தடியாக சுருங்கியுள்ளது. இந்த வடிகாலை துார் வார அதிகாரிகள் வந்த போது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், வடிகால் துார் வார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, காமராஜர் நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஆவடி, தி.மு.க., - எம்.எல்.ஏ., நாசர் மக்களிடம் பேச்சு நடத்தினார்.
'இப்போ துார் வாரும் பணி மட்டும் தான் நடக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என, உறுதியளித்த நாசர், அங்கிருந்த மூதாட்டிக்கு திருஷ்டி சுற்றி போட்டார்; மற்றொருவரிடம், 'ஆக்கிரமிப்பை இப்போது அகற்றப் போவதில்லை' என, அவர் தலையில் அடித்து சத்தியம் செய்தார். இதையடுத்து, கூட்டம் கலைந்தது.
இதை பார்த்த, தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'போராட்டம் நடக்கிற இடத்துல நம்ம அண்ணனை களத்துல இறக்கி விட்டால், போலீசுக்கு வேலை இருக்காது போலிருக்கே...' என, பெருமையாக பேசிய படி நடந்தார்.