PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM

சென்னை, மணலி புதுநகர், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தனி கட்டடம் கோரி, பொன்னேரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட, மாணவ - மாணவியரிடம், பொன்னேரி தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் பேச்சு நடத்தினார். போராட்டத்தை முடித்து வைத்து, அவர் கிளம்பிய போது, அங்கிருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் கபிலனை, மாணவர்கள் சூழ்ந்து, 'ஆட்டோகிராப்' கேட்டனர்.
உதவி ஆய்வாளர், எம்.எல்.ஏ.,வை காட்டி, 'அவர் தான் உயர் பதவியில் உள்ளார். அவரிடம், ஆட்டோகிராப் வாங்கிக் கொள்ளுங்கள்' என, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், மாணவர்கள், உதவி ஆய்வாளரை விட்டு நகரவில்லை. இதை பார்த்த, எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், 'அரசியல்வாதிகளை விட அதிகாரிகளை தான் மாணவர்கள் விரும்புகின்றனர்...' எனக்கூறி, சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.
பார்வையாளர் ஒருவர், 'நல்ல அரசியல்வாதிகளை மாணவர்கள் விரும்புவர்... நம்ம நாட்டில் அதற்கு எப்பவும் பற்றாக்குறை தான்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.