PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

தர்மபுரி தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை ஆதரித்து நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில், அவரது கணவரும், கட்சி தலைவருமான அன்புமணி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 'தர்மபுரி மாவட்டத்தில் எம்.பி., ஆக நான் இருந்த போது, போராட்டம் நடத்தி துவங்கிய திட்டங்கள், ஆய்வு செய்த திட்டங்கள் அனைத்தையும், சவுமியா நிச்சயம் முடித்து வைப்பார். அவரை பொது வேட்பாளராக பார்க்க வேண்டும்.
'போதைப்பொருள் நடமாட்டத்தை முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. பெண்களின் ஒட்டுமொத்த கோபமும், சமுதாய சீர்கேட்டிற்கு காரணமானவர்கள் மீது இருக்க வேண்டும். அதற்காக நீங்கள், பா.ம.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
இளம் வாக்காளர் ஒருவர், 'திராவிட கட்சிகள் தான் சமூக சீர்கேடுகளுக்கு காரணம்னா, அவங்களோடு இவ்வளவு நாளா கூட்டணி வச்ச இவங்களுக்கும் அதில் பங்கு இருக்கே...' என, முணுமுணுக்க, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.

