PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கோவையில் உலக தாய்மொழி தின விழா நடந்தது. இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார்.
விழாவில் சாமிநாதன் பேசுகையில், 'இன்றைக்கு தமிழகத்தில் தமிழை விட மற்ற மொழிகள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளில் எல்லாம், தமிழை தவிர பிறமொழிகளில் தான் அதிகம் எழுதப்பட்டுள்ளன...' என்றபடியே தொடர்ந்து பேசினார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அமைச்சர் சொல்றது நுாற்றுக்கு நுாறு சரிதான்... ஆனா, அதை எல்லாம் தடுக்க தானே, தமிழ் வளர்ச்சி துறைன்னு ஒண்ணை உருவாக்கி, அதுக்கு இவரை அமைச்சராகவும் ஸ்டாலின் ஆக்கியிருக்காரு... தமிழை வளர்க்க நடவடிக்கை எடுக்காம, இங்க வந்து இவரே புலம்பினா என்ன அர்த்தம்...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.