PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவரான அணைக்கட்டு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டம் முடிந்ததும் பேட்டி அளித்த நந்தகுமார், 'இங்கு, 17 லட்சம் சதுரடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது; நுாற்றுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அலுவலகம் அமைத்து உள்ளன.
'இவற்றில் பணிபுரியும் அனைவரும் கோவை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைத்துள்ளது. இந்த வசதி, எங்கள் வேலுார் மாவட்டத்துக்கு கிடைக்கவில்லையே என்ற பொறாமை எனக்கு ஏற்பட்டுள்ளது' என்று அங்கலாய்த்தார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவரது மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் தான், ஆட்சியிலும், கட்சியிலும் சீனியரா இருக்கிறார்... அவர் ஒரு நடவடிக்கையும் எடுக்கலைன்னு குத்தி காட்டுறாரோ...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

