PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, சிந்தகம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குடும்பத்துடன் வந்து ஓட்டளித்த அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை, நிருபர்களுக்கு பேட்டிளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் திராவிட கட்சிகள் வந்த பிறகு, தேசிய கட்சியான காங்கிரஸ் சரிந்தது. காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், பா.ஜ.,வுடன் கள்ள உறவில் உள்ளது. ஆனால், அவர்கள் பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கள்ள உறவில் இருப்பதாக கூறுகின்றனர். பல்வேறு வழக்குகளில் பா.ஜ., அரசு, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தை பொறுத்த வரை தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான் போட்டி. மூன்றாவது கட்சியை மக்கள் விரும்பவில்லை' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'மூன்றாவது கட்சியை இவங்க ரெண்டு கட்சிகளும் விரும்புறது இல்ல... மக்கள் மேல பழி போடுறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

