PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

சென்னை புளியந்தோப்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசிய பின், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நன்றி கூறினார்.
அப்போது அவர், 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரே மாநகர தந்தையாக இருந்தவர், தற்போது, மாநிலத்திற்கும் தந்தையாக உள்ளார். மக்களின் குறைகளை தாயுள்ளத்தோடு அணுகுவதால், அவரை தாயுமானவராகவே மக்கள் பார்க்கின்றனர். தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு... என்ற பாடல் உண்டு. ஆனால், அந்த வீட்டையே தெய்வமாக இருந்து தந்த நம் முதல்வர், எல்லா புகழும், வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்' என்றார்.
இதை கேட்ட பயனாளிகளில் ஒருவர், 'மக்களுக்கு வீடு தந்த தெய்வத்துக்கே அருளாசி வழங்கிய அமைச்சர், அவரை விட பெரிய தெய்வமாக மாறிட்டாரே' என முணுமுணுக்க, அருகில் உள்ளவர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

