PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

ஈரோடு மாவட்டம், கோபியில், சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த மரங்களை அகற்ற அனுமதி அளித்தது தொடர்பாக, துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவாதிப்பு கூட்டம், ஆர்.டி.ஓ., கண்ணப்பன் தலைமையில் கோபியில் நடந்தது.
இதில், அகற்றிய மரங்களின் எண்ணிக்கை, நடப்பட்ட மரக்கன்று விபரத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பட்டியலிட்டனர். இதைக் கேட்ட விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், கேள்வி மேல் கேள்வி எழுப்ப விவாதம் காரசாரமானது.
ஆர்.டி.ஓ., தன் பங்கிற்கு, மரங்களில் ஆணி அடித்தது மற்றும் விளம்பர பலகை வைத்தது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க, 'அதற்கு நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை' என, பதில் அளித்தனர்.
இதை கவனித்த ஒருவர், 'மரத்தை வெட்டும் போது எல்லாரும் சும்மா இருந்துட்டு, இப்ப கூட்டத்துல கும்மியடிக்கிறாங்க...' என கமென்ட் அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.