PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் நடந்த, கர்ப்பிணியர் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் சாந்தி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வெங்கடேஷ்வரன் பேசுகையில், 'இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மாவட்ட அளவிலான முக்கிய அதிகாரிகள் அனைவரும் பெண்கள்; நான் மட்டும் தான் ஆண். கலெக்டர் சாந்தி, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., - சி.இ.ஓ., - ஜே.டி., ஹெல்த், - டி.டி., ஹெல்த், மாவட்ட சமூக நல திட்ட அலுவலர், மகளிர் திட்ட அலுவலர், பி.டி.ஓ.,க்கள் உட்பட அனைவரும் பெண்களாக உள்ளனர். இவர்களின் ஆளுமையால், தர்மபுரி மாவட்டம் வேகமாக முன்னேறி வருகிறது' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'வரும் சட்டசபை தேர்தலில், தர்மபுரி தொகுதியில், பா.ம.க., சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்கினால், தன், 'சீட்'டை, எம்.எல்.ஏ., விட்டு கொடுத்துடுவாரா...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.