PUBLISHED ON : டிச 30, 2024 12:00 AM

தமிழக உணவு பாதுகாப்பு துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாலையோர உணவு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு சான்று வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, போரூரில் நடந்தது. இதில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், 500க்கும் மேற்பட்ட சாலையோர உணவு வியாபாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அமைச்சர் நாசர் பேசிக் கொண்டிருந்த போது, மேடைக்கு பின்னால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் இடையூறு ஏற்பட, அமைச்சர் நாசர் ஆத்திரமடைந்து, அவர்களை பார்த்து, 'நீங்கள் வந்து பேசுங்கள்...' என, ஆவேசப்பட்டார். பின், அமைதி நிலவ, பேச்சை தொடர்ந்த நாசர், 'எங்க பார்த்தாலும் கொசு தொல்லை அதிகமா போச்சு...' என்றார்.
இதை கேட்ட வியாபாரி ஒருவர், 'அதிகாரிகளை தான் அமைச்சர், கொசுன்னு சொல்றார்...' என, முணுமுணுக்க, மற்றொரு வியாபாரி, 'ஆமா... என்கிட்ட சேட்டை செஞ்சா நசுக்கிடுவேன்னு சொல்லாம சொல்றாரோ...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.

