PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் நகர, தி.மு.க., சார்பில் நடந்த, துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'நாட்டிலேயே தான் மட்டும் தான் யோக்கியன் என்பது போல பேசும் சீமானை, ஒன்றரை மாதமாக ஆளையே காணோம்; 'யு டியூப்' சமூகவலைதளத்தில் கூட வருவதில்லை; அவர் கதை முடிந்தது. தி.மு.க.,வை யாரெல்லாம் விமர்சனம் செய்து வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கின்றனரோ, அவர்கள் விளங்கவே மாட்டார்கள். தற்போது, சின்ன மாங்காவும், பெரிய மாங்காவும் மேடையிலேயே அடித்துக்கொண்டு, ரெண்டு மாங்காவும், 'அவுட்' ஆகி விட்டனர். தி.மு.க., தொண்டன் வயிற்றெரிச்சல் சும்மா விடாது' என்றார்.
கட்சி மூத்த நிர்வாகி ஒருவர், 'அமைச்சர் சாபத்துக்கு முன்னாடி, கேரள மந்திரவாதி கூட தோத்துப் போயிடுவார் போலிருக்கே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்த நிர்வாகிகள் சத்தமாக சிரித்தனர்.

