PUBLISHED ON : ஆக 20, 2026 12:58 AM

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ். ஜெயித்ததும், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்ததால், அவரை கட்சியில் இருந்து அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் நீக்கினார்.
சட்டசபையில் சமீபத்தில் காமராஜ் பேசுகையில், 'தமிழ கத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர் விஜயால் மாற்றம் வந்தது. அதேபோல, கர்நாடகாவிலும், மத்தியிலும் காங்கிரஸ், பா.ஜ., அல்லாத அரசு அமைய வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்' என்றார்.
இதற்கு பதிலடி தந்து, திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செல்வம் அளித்த பேட்டியில், 'தேசிய ஜனநாயக கூட்டணியால் தான் காமராஜ் வெற்றி பெற்றார். அவர் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக நினைத்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'இவர் சொல்றது சரிதானே... தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல காமராஜ் பேசலாமா...?' என முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
