PUBLISHED ON : மார் 17, 2025 12:00 AM

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2,500 மாணவ - மாணவியருக்கு அறுசுவை உணவு மற்றும் தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை வரவேற்று பேசிய தலைமை ஆசிரியர், 'பொதுவாக ஒருவர் பற்றி நாம் தெரிந்துகொள்ள, கூகுளில் அவரது பெயரை போட்டு பார்த்தால் தான் தெரியும். நம் எம்.பி., குறித்து தெரிந்துகொள்ள, கூகுளில் டி.ஆர்., என அடித்தால் போதும், அவர் குறித்த தகவல்கள் வந்து விடும்' என்றார்.
இதை கேட்ட இளம் நிருபர் ஒருவர், உடனே தன் மொபைல் போனை எடுத்து, டி.ஆர்., என போட்டு தேட, நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் குறித்து தான் வந்தது.
இதை, தன் நண்பர்களிடம் அவர் காட்ட, 'எம்.பி.,க்கு தலைமை ஆசிரியர் ஐஸ் வச்சதை, நீ நிஜம்னு நம்பிட்டியா...' என, அவர்கள் கூறவும், அனைவரும் கமுக்கமாக சிரித்தனர்.