PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான விளையாட்டுப்போட்டிகள், கோவை தனியார் கலை மற்றும் அறிவியல்கல்லுாரியில் நடந்தது. ஜூடோ, பாக்சிங்,டேக்வாண்டோ போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி, மாணவர்களை மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுத்தனர்.
போட்டியில் நிறைய விதிமுறைகள் இருந்தன. உதாரணத்திற்கு, பாக்சிங் போட்டிக்கு தலையில் ஹெல்மெட், கை கிளவுஸ், காலில் சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்திருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள்இடம் பெற்றிருந்தன. பல அரசு பள்ளி மாணவர்களிடம்இந்த உபகரணங்கள் இல்லை; வெறும் காலிலும், செருப்பும் அணிந்தபடி போட்டிக்கு வந்தனர்.
அவர்களை நடுவர்கள் அனுமதிக்காமல்,'விதிமுறைப்படி வாங்க' என்று கூறி விட்டனர். இதைப் பார்த்த பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர், 'துணை முதல்வர் கையில் விளையாட்டுத் துறை இருந்தும், அதிகாரிகள் அசர மாட்டேங்கிறாங்களே... முன்கூட்டியே உபகரணங்களை கொடுத்திருந்தால் இப்பிரச்னையே வந்திருக்காதே...' என, புலம்பியவாறுநடந்தனர்.

