PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில், அ.தி.மு.க., சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அமைப்பு செயலர் செம்மலை பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'தமிழகத்தில், தற்போது நிறைய அரசியல் கட்சிகள் துவங்கப்பட்டு விட்டன. அத்தனை கட்சிகளும், தி.மு.க.,விற்கு எதிரான மனநிலையில் தான் இருக்கின்றன. இன்று தி.மு.க.,வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் எல்லாம் தயவுசெய்து, 2026 தேர்தலில் ஓட்டுகளை சிதறடித்து விடாதீர்கள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பர். இதனால், அக்கட்சிகள் 2026 தேர்தலில் பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு வர வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'விஜயை தான் கூட்டணிக்கு கூப்பிடுறார்...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'மற்றவர்களை கூப்பிடுறது இருக்கட்டும்... முதலில், பிரிந்து கிடக்கிற நம்ம தலைவர்கள் ஒண்ணு சேர்ந்தால்தான், ஆட்சியைப் பற்றி நினைக்க முடியும்...' என, புலம்பியபடியே நடந்தார்.

