PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

கோவை மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், பொள்ளாச்சி அருகே சூலக்கல்லில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதை துவக்கி வைத்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள் என, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'அனைவரும் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் வெற்றிக் கூட்டணி அமையும். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து, தகுந்த நேரத்தில் பழனிசாமி அறிவிப்பார். அ.தி.மு.க., 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வினர் தான், '200 இடங்கள்ல வெற்றி'ன்னு முழங்கிட்டு இருந்தாங்க... அமித் ஷாவை சந்தித்த பிறகு, இவரும் அதே பல்லவியை பாட ஆரம்பிச்சுட்டாரே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

