PUBLISHED ON : ஜன 09, 2024 12:00 AM

மதுரையில், 'தாத்தா தந்த கண்ணாடி' எனும் நுால் வெளியீட்டு விழாவில், நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் பங்கேற்று நுாலை வெளியிட்டார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்ததால், நுால் ஆசிரியரான பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம ஸ்ரீநிவாசன் தலைமுடி கலைந்திருந்தது.
இதை கவனித்த இல.கணேசன், ஒரு நிர்வாகியிடம் சீப்பு கேட்டு வாங்கி, ராம ஸ்ரீநிவாசனின் கலைந்த முடியை வாரிவிட்டு, காதில் ஏதோ கிசுகிசுத்தார். கவர்னரின் இந்த செயலால் ராம ஸ்ரீநிவாசன் நெளிந்தார்.
இதை கவனித்த கூட்டத்தினர், 'பதவி தலைக்கனம் இல்லாத ஒருவரால் தான் இப்படி செய்ய முடியும்...' என, நெகிழ்ந்தனர்.
மூத்த நிருபர் ஒருவர், 'பொதுவா, தமிழக அரசியலில் ஒருவருக்கொருவர் காலை தான் வாருவர். தலையை வாருவதை இப்ப தானே பார்க்க முடிகிறது...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.