PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, 'உள்ளம் தேடி இல்லம் நாடி' பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசும்போது, 'டாஸ்மாக் மது கடைகளால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமை சாதாரணமாக நடக்கிறது. திருவண்ணாமலை யில், இரண்டு போலீசார் ஒரு பெண்ணை சீரழித்து, அவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டனர்.
'அந்த போலீசார் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை; சஸ்பெண்ட் கூட செய்யவில்லை. அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டித்து, நேற்று கிருஷ்ணகிரியிலும் பேசினேன். அதை நீங்கள், 'டிவி'க்களில் பார்த்தீர்களா...' என, தொண்டர்களை பார்த்து கேட்டார்.
மேடையின் கீழிருந்த தொண்டர் ஒருவர், 'திருவண்ணாமலை சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் இருவரை, 'டிஸ்மிஸ்' பண்ணிட்டாங்க... நம்மை, 'டிவி' பார்க்க சொல்லிட்டு, நம்ம தலைவி நாட்டு நடப்பே தெரியாம இருக்காங்களே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.