PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

தி.மு.க., அரசை கண்டித்து, சேலம் மாவட்டம், ஆத்துார், ராணிப்பேட்டையில், அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏற்காடு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சித்ரா பேசும்போது, ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர் நடிகை கவுதமி என்பதற்கு பதிலாக ரேவதி என கூறினார்.
உடனே, சித்ராவிடம் இருந்து மைக்கை வாங்கிய, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், 'ரேவதியா, கவுதமியா...' என, விஜய் நடிப்பில் வெளியான நினைத்தேன் வந்தாய் படத்தின் பாடலை பாடியபடி, 'என்னம்மா பேசுறீங்க... நீங்க ரேவதியின் ரசிகையா இருப்பீங்க போல...' என்றார்.
அதற்கு நடிகை கவுதமி, 'பரவாயில்லை... நான் கூட ரேவதியின் ரசிகை தான்...' என்றார்.
தொண்டர் ஒருவர், 'யார் யாரோட ரசிகை என்பது முக்கியமில்ல... நம்ம மாவட்ட செயலர், விஜய் ரசிகர்னு நல்லாவே தெரிஞ்சு போச்சுப்பா...' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

