PUBLISHED ON : ஜூலை 14, 2025 12:00 AM

சென்னை, பெரம்பூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'எமர்ஜென்சி என்ற அவசர கால சட்டம் அமலில் இருந்த நேரத்தில், காமராஜர் திருப்பதிக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 'நீங்கள் அங்கு செல்லக்கூடாது' என, காமராஜரிடம் கூறினார்.
'காமராஜரோ, 'நான் திராவிடக்காரனல்ல; காங்கிரஸ்காரன்' என்றார். அதற்கு கருணாநிதி, 'உங்களை கைது செய்ய மத்திய அரசு காத்துக் கொண்டிருக்கிறது. தமிழக எல்லைக்குள் இருந்தால் நான் பாதுகாப்பேன். அதனால் தான் அவ்வாறு கூறினேன்' என்றார்.
'காமராஜர் இறக்கும் போது கடைசியாக கருணாநிதி கையை பிடித்துக் கொண்டு, 'நீங்கள் தான் ஜனநாயகத்தின் காவலர்' என கூறினார்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'காமராஜர் மதியம் துாக்கத்துலயே இறந்து போனதா படிச்சிருக்கோம்... இவர் வேற விதமா சொல்றாரே...' என முணுமுணுக்க, சக நிருபர், 'இவர் சொல்றதை, காமராஜர் வந்து மறுக்கப் போறாரா என்ன...' என, சிரித்தபடியே கிளம்பினார்.