PUBLISHED ON : செப் 30, 2024 12:00 AM

கோவை, சுந்தராபுரத்தில் நடந்த, அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். அவர் பேச்சை தொண்டர்கள் ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தனர். பேச்சின் இடையில், 'சாமானியன் கூட உயர்ந்த பதவிக்கு வந்தது, தி.மு.க.,வில் தான்' என, வேலுமணி கூறினார்.
தொண்டர்கள், 'அண்ணன் திடீரென, தி.மு.க.,வை ஆதரித்து பேசுறாரே...' என, 'திருதிரு'வென முழித்தனர். இதை கவனித்த வேலுமணி, தொடர்ந்து பேசுகை யில், 'சாமானியன் உயர்ந்த பதவிக்கு வந்தது, அண்ணாதுரை வசம், தி.மு.க., இருந்த போது நடந்தது. இப்போதுள்ள, தி.மு.க.,வில் அல்ல...' என, விளக்கினார்.
கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'எதை பேசினாலும் தெளிவா பேசுங்கப்பா... இப்படி பொடி வச்சி பேசினா, வலைதளங்களில் தான் வைரல் ஆவீங்க...' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'அதுக்கு தான் இப்படி பேசுறாரோ...' என, 'கமென்ட்' அடித்து நகர்ந்தார்.

