PUBLISHED ON : டிச 02, 2024 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளான, கடந்த, நவ., 27ல், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, திண்டுக்கல் மாவட்ட, தி.மு.க., சார்பில், 1 கிராம் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் நடந்தன. அன்றைய தினம் மட்டும், 38 குழந்தைகள் பிறந்தன.
அன்று காலை, அமைச்சர் பெரியசாமி, 14 குழந்தைகளுக்கு, 1 கிராம் மோதிரத்தை அணிவித்து சென்றார். பிற குழந்தைகளின் பெற்றோர், மோதிரம் கிடைக்குமோ, இல்லையோ என, சந்தேகத்தில் இருந்தனர். மறுநாள் காலை, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் அரசு மருத்துவமனைக்கு வந்து மீதமுள்ள, 24 குழந்தைகளுக்கும் மோதிரத்தை அணிவித்து சென்றார்.
அப்போது கட்சி நிர்வாகி ஒருவர், 'முதல்வர் அடிக்கடி சொல்வதை போல, நாங்கள் சொன்னதை செய்வோம்... செய்வதை தான் சொல்வோம்...' என, பெருமை பேச, அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'என்ன செஞ்சாலும், எல்லாம் ஓட்டுக்கு தானே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.