PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் சனாதன கொள்கையின் அடிப்படை, மக்களை பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்துவது தான். இதை தான் துணை முதல்வர் உதயநிதி விமர்சித்தார். சனாதனம், இந்திய அரசியல் அமைப்பல்ல. இந்திய அரசியல் அமைப்பு சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. ஆனால், இதை மத்திய அரசும், கவர்னரும் ஏற்க மறுக்கின்றனர்.
'அமைச்சர் பொன்முடியின் ஹிந்து விரோத பேச்சுக்கு பின், அது தொடர்பாக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார்; அவரது பேச்சில் யாருக்கும் உடன்பாடில்லை. மற்றபடி, நாட்டுக்கு நன்மை பயக்காதவற்றை, மீண்டும் மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மத்திற்கு உகந்தது அல்ல' என்றார், பத்திரிகையாளர்களை பார்த்த படி.
மூத்த நிருபர் ஒருவர், 'பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது தான், நாட்டுக்கு நன்மை பயக்கும் செயலாக இருக்கும்...' என, முணுமுணுத்தார். அதை அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

