PUBLISHED ON : ஜூலை 12, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல்லில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் இந்திரா, 1975ம் ஆண்டு அரசியல் சாசனத்தை முழுமையாக முடக்கி, எமர்ஜென்சி என்ற அவசரநிலை பிரகடனத்தை ஏற்படுத்தினார். தி.மு.க.,வின் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தினார். அந்த கட்சியுடன் தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது.
'அ.தி.மு.க.,வை அழிக்கும் அளவிற்கு பா.ஜ.,விற்கு சக்தி உள்ளது என, திருமாவளவன் கூறுகிறார் என்றால், பா.ஜ., வலிமையான கட்சி என பொருள். எனவே, வலிமையான கட்சியான, பா.ஜ.,வுடன், திருமாவளவன் கூட்டணி சேர வேண்டும். திருமாவளவன் நெற்றியில் இருந்த திருநீறை அழித்ததை அரசியலாக்க வேண்டாம்; அது, அவரது தனிப்பட்ட விருப்பம்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'திருநீறை அழித்த திருமாவளவனை திட்டாம கூட்டணிக்கு கூப்பிடுறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள், 'எல்லாம் அரசியல் லாப கணக்கு தான்...' என்றபடியே நடந்தனர்.