PUBLISHED ON : ஜன 14, 2024 12:00 AM

'இப்படி நாக்கு தள்ளுதே!'
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை செய்த அதிகாரிகள், ஸ்டேஷனில் ஒரு இடத்தை தேர்வு செய்து, சுத்தப்படுத்தி, 'அம்ரித் பாரத்' திட்ட பணி வரைபடத்தை அங்கு வைத்திருந்தனர்.
பொது மேலாளர், அந்த இடத்திற்கு செல்லாமல், நடைமேடை, லிப்ட், எஸ்கலேட்டர், நுழைவு வாயில், பார்க்கிங் என, ஒரு மணி நேரம் சுழன்று ஆய்வு செய்தார். ஒரு கட்டத்தில் ஸ்டேஷனை விட்டு வெளியே சென்று, பஸ்கள் ஸ்டேஷனுக்குள் வந்து பயணியரை இறக்கி விட்டு செல்வது குறித்து
கேட்டார்.
ஓட்டமும், நடையுமாக ஆய்வு நடத்திய பொது மேலாளரை பின் தொடர்ந்து ஓடிய அதிகாரிகள், மதிய வேளையில் பசியுடன், 'கிறுகிறுத்து' நின்றனர்.
'இவர் வேகத்துக்கு நம்மால முடியலடா சாமி...' என, சிலர் முணுமுணுக்க, சுமை துாக்கும் தொழிலாளி ஒருவர், 'ஒரு நாளைக்கே இவங்களுக்கு இப்படி நாக்கு தள்ளுதே... நம்மை போல் இருந்தால் அவ்வளவு தான்...' என, சக தொழிலாளியிடம் கூறி சிரித்தார்.
'மந்திரி பதவியாவது கிடைக்கும்!'
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'சட்டசபை நாயகர் கலைஞர்' என்ற தலைப்பில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கருத்தரங்கம் பெரம்பலுாரில் நடந்தது.இதில், தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில், 'கருணாநிதி ஆரம்ப பள்ளி மட்டுமே படித்திருந்தாலும், அவருக்கென தனி பேச்சாற்றல், எழுத்தாற்றல் என, எல்லா திறமைகளும் இருந்தன. தொடர்ச்சியாக, 13 தேர்தல்களில் போட்டியிட்டு, தோல்வி அடையாத ஒரே தலைவர். அவரை போல ஒரு தலைவன் இந்தியாவில் அல்ல... உலகிலேயே கிடையாது.
'தன்னை சந்திக்க யாருக்காவது முன் அனுமதி கொடுத்திருந்தால், குறித்த நேரத்தில் சந்திப்பார். மக்களோடு மக்களாக இருந்த தலைவர். எதிர்க்கட்சி தலைவராக, முதல்வராக சிறப்பாக பணியாற்றியவர்'
என, புகழ் பாடினார்.
பார்வையாளர் ஒருவர், 'அதெல்லாம் சரி...
தற்போதைய தலைவர், குட்டி தலைவரை புகழ்ந்தால் இவருக்கு எதிர்காலத்திலாவது மந்திரி பதவி கிடைக்கும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.'மேடம் ரொம்ப நல்லவங்க!'திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது. இதில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் பேசுகையில், 'சித்த மருத்துவ தின ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர்கள் சிறப்பாக செய்துள்ளனர்; அவர்களுக்கு என் பாராட்டுக்கள். சில நேரங்களில்,
உங்களை நான் கடிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன செய்வது... பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது' என்றார்.அருகில் அமர்ந்திருந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி, 'மேடம் ரொம்ப கண்டிப்போ... லீவெல்லாம் எப்படி... கேட்ட உடனே கொடுப்பாங்களா...?' என, கேள்வி எழுப்ப, சித்த மருத்துவ அலுவலர்கள், 'எங்க மேடம் ரொம்ப நல்லவங்க... லீவு கேட்டதும் கொடுத்துடுவாங்க...' எனக்கூறி, அசடு வழிந்தனர்.

