PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

ஈரோடு மாவட்டத்தில் நடந்த, நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'வரும், 2026 சட்டசபை தேர்தலில், கோபி சட்டசபை தொகுதியில் மீண்டும் சீதாலட்சுமி போட்டியிடுவார்; மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்' என, அறிவித்தார்.
இந்த அறிவிப்பால் குஷியான சீதாலட்சுமி, கோபி தொகுதியில் உள்ள, 296 ஓட்டுச்சாவடிகளுக்கும், தலா,10 பொறுப்பாளர்களை நியமித்து, 'பூத்' கமிட்டியை பலப்படுத்த வேண்டும் எனவும், கடந்த தேர்தலில் அத்தொகுதியில் பெற்ற ஓட்டுகளை சுட்டிக்காட்டி, 2026ல் வெற்றி பெறுவோம் எனவும் பேசி, சமூக வலைதளங்களில் பிரசாரத்தை துவக்கி விட்டார்.
இதைப் பார்க்கும், 'நெட்டிசன்'கள், 'கோபி தொகுதி, அ.தி.மு.க., சீனியரான செங்கோட்டையனின் கோட்டை. போன தேர்தலில் தோற்றும், சீதாலட்சுமி ஆர்வம் குறையலையே... இவங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும்...' என, 'கமென்ட்' அடித்து வருகின்றனர்.