PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

சென்னை திருவொற்றியூர் பகுதி தி.மு.க., இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், இரவு 9:00 மணிக்கு பின், தலைமை கழக பேச்சாளர் தமிழ் சாதிக் பேசத் துவங்கினார்.
அதுவரை பொறுத்திருந்த பெண்கள், சட்டென எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டனர். இதனால், பேச்சாளர் அவசர அவசரமாக பேச்சை முடித்துக் கொண்டார். வழக்கமாக, இதுபோன்ற கூட்டங்களில் பெண்களுக்கு புடவை, குடம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இந்த கூட்டத்தில், புது யுக்தியாக, 'ஹாட் பாக்ஸ்'கள் வழங்கப்பட்டன. அதை வாங்க பெண்கள் கூட்டம் அலைமோதியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
'ஹாட் பாக்ஸ்' கிடைக்காமல் ஒரு பெண் ஏமாற்றத்துடன் நின்றிருக்க, அருகில் இருந்த மற்றொரு பெண், 'விடுக்கா... தேர்தல் வருதுல்ல... இந்த மாதிரி நிறைய பரிசுகள் வீடு தேடி வரும் பாரு...' எனக்கூற, இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர்.