PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

பெரம்பலுார் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில்பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம், தமிழக வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
சங்க நிர்வாகிகளான தாசில்தார்கள் சிலர், பெரம்பலுார்பாலக்கரை பகுதியில் தங்கியிருந்த முதல்வரை சந்திக்க சென்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி, 'முதல்வர் வெளியில் வரும்போது, மக்களை சந்திப்பார்; அப்போது,மக்களோடு மக்களாக நின்று மனு கொடுங்கள். முன் அனுமதியின்றி, தனியாக சந்திக்க யாரையும் அனுமதிக்க முடியாது' என்றனர்.
இதனால், மக்களுக்காக தடுப்பு கயிறு கட்டிய பகுதியில் காத்திருந்து, தாங்கள் யார் என்று கூட முதல்வரிடம் சொல்ல முடியாமல், மனு அளித்து விட்டு கிளம்பினர்.
இதை கவனித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 'தாலுகா ஆபீசில் மக்களை காக்க வைக்கிறாங்கல்ல...இப்ப தெரியும் மக்கள் கஷ்டம்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

