PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, கோவை நேரு ஸ்டேடியம் எதிரே விறுவிறுப்பாக நடக்க, பார்வையாளர்களிடம் இருந்து விசில் பறந்தது. அப்போது, விளையாட்டு சங்க நிர்வாகி ஒருவர், 'இங்கு விளையாட்டு வீரர்ஒருவரின் பைக் சாவி தொலைந்து விட்டது; சாவி கிடைத்தவர்கள் மேடைக்கு வந்து ஒப்படையுங்கள்' என, அறிவித்தபடியே இருந்தார்.
அடுத்த, 10 நிமிடங்களில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் சாவியை மீட்டு வந்து ஒப்படைத்தார். அப்போது, மைக்கில் பேசிய நிர்வாகி, 'சாவியை மீட்டு தந்த போலீஸ்காரருக்கு கைதட்டல் வழங்கலாமே' என்றதும், கரகோஷம் பலமாக ஒலித்தது.
கூடைப்பந்து பயிற்சியாளர் ஒருவர், 'எப்படி கண்டுபிடிச்சாங்க பார்த்தீங்களா... நம்ம போலீசை திறமையில் அடிச்சுக்க முடியாது...' என புகழ்ந்து பேச, மற்றொருவர், 'திறமையில் மட்டும் தானா...?' என, கிண்டலாக கேள்வி எழுப்பியவாறு நடந்தார்.

