PUBLISHED ON : ஜூலை 24, 2011 12:00 AM

உளவு பார்க்கும் எஸ்.பி.,!
ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., அனில்குமார் கிரி, விழாக்களில் பங்கேற்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளார்.
தனியார் விழா ஏற்பாட்டாளர்கள் பலர், எஸ்.பி.,யை சந்தித்து, 'உங்கள் பெயரை விழா அழைப்பிதழில் போட்டுள்ளோம். நீங்கள் அவசியம் வர வேண்டும்' என, கூறுகின்றனர். எஸ்.பி.,யும் வந்தவர்கள் மனது நோகக் கூடாது என, 'கண்டிப்பாக வந்து விடுகிறேன்' எனக் கூறுகிறார்.பின், தனிப்பிரிவு போலீசார் மூலம், விழா நடத்துவோர் குறித்து, ரகசியமாக விசாரிக்கிறார். விழா நடத்துவோர் மீது வழக்கு, சச்சரவுகள் இல்லை என அறிந்தால், தன் சார்பில் கீழ்மட்ட அதிகாரி யாரையாவது விழாவுக்கு அனுப்புகிறார்.இதைக் கண்ட போலீசார், 'நம்ம எஸ்.பி., ரொம்ப ரொம்ப உஷார் தான்...' என, பெருமைபடக் கூறி வருகின்றனர்.
'தூங்கியும் ஜெயித்தேன்...!'
சென்னையில், ஒரு கல்லூரி விழாவில், தி.நகர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கலைராஜன் பங்கேற்றார். 'மாணவியருக்கு இலவச சைக்கிள், பெண்களுக்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம், இலவச லேப்-டாப், ஆடு, மாடு, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என, தேர்தல் பிரசாரத்தில் அறிவித்த திட்டங்கள் பற்றி, மாணவியர் மத்தியில் பேசினார்.பின், 'நடந்து முடிந்த தேர்தலில், ஓட்டுப் பதிவு நாளன்று, வீட்டில் தூங்கி விட்டேன். கடைசி நேரத்தில், பிரசாரம் செய்வது, தேர்வு எழுதும் முன், விழுந்து விழுந்து படிப்பதற்கு சமம். அப்படி படித்தால், எதுவும் தலையில் ஏறாது. அதனால், நானும் கடைசி கட்ட பிரசாரத்தில் ஈடுபடாமல் தூங்கி விட்டேன். அப்படி இருந்தும், 32 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். காரணம் உங்களை மாதிரி உள்ள இளைஞர்கள் ஓட்டு போட்டதால் தான்...' எனக் கூறியதும், அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டினர்.இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்னு பேச்சுக்கு சொல்வாங்க... இவர் நிஜமாக செஞ்சு காட்டிட்டாரே...' என, 'கமென்ட்' அடித்தார்.
'மாஜி' துணைவேந்தரின் புலம்பல்!திருப்பூரில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், 'யோகமும் மனித மாண்பும்' என்ற தலைப்பில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. கோவை பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் இளங்கோ, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசும்போது, 'நடந்து முடிந்த தேர்தலில் நான் கிணத்துக்கடவு தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டேன். இது, பெரும்பாலானவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. மற்றவர்கள் எல்லாம், கொள்கைகளை பரப்புவதற்கு தனித்தனியாக, 'மீடியா' வைத்துள்ளனர். எனக்கு அப்படி எந்த மீடியாவும் இல்லை' என, தனது தேர்தல் தோல்வி சோகத்தை சூசகமாக வெளிப்படுத்தினார்.இதைக் கேட்ட மாணவர் ஒருவர், 'ஐயா, பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. சேனல் ஆரம்பிச்சு அரசியல் பண்ணினவங்க எல்லாம் இப்ப பல, 'செக்ஷன்'ல அடுத்தடுத்து,
'உள்ளே' போய்ட்டு இருக்காங்க' என சத்தமாகக் கூற, அருகில் இருந்தவர்கள், 'குபீர்' என சிரித்தனர்.
'டான்ஸ்' ஆடிய எம்.எல்.ஏ.,!
கோவை மாவட்டம் அவினாசி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், சில தினங்களுக்கு முன் திறந்து வைத்தார். சென்னையில் இருந்து முதல்வர் பேசுவதால், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மிகுந்த பதட்டத்துடன் இருந்தனர்.முதல்வர் முன் தைரியமாக பேச வேண்டும் என்பதற்காக, கலெக்டர் மதிவாணன், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி ஆகிய இருவரும் அடிக்கடி பேசி, ஒத்திகை பார்த்தனர். எம்.எல்.ஏ., தெளிவில்லாமல் பேசி, தனக்குத் தானே டென்ஷன் ஆனதை பார்த்த கலெக்டர், 'முதல்வர் இங்கு நிற்பதாக நினைத்துக் கொண்டு, புதிய கட்டடம் திறந்ததற்காக நன்றி சொல்லுங்கள்' என, அறிவுறுத்தினார். ஆனாலும், எம்.எல்.ஏ., தொடர்ந்து, 'டான்ஸ்' ஆடியதைக் கண்ட தொண்டர்கள், 'அம்மா பெயரைக் கேட்டாலே, அண்ணனுக்கு இப்படி கை, கால் எல்லாம் உதறுதே... இவர், சட்டசபையில எப்படி பேசப் போறாரோ?' என, 'கமென்ட்' அடித்தனர்.

