PUBLISHED ON : ஜூலை 28, 2011 12:00 AM

'பேராவூரணிக்கு வாங்க...!'
இந்திய குடும்ப நலச் சங்க சென்னை கிளையின் சார்பில், சங்கத்தின் துவக்க நாள் மற்றும் உலக மக்கள் தொகை தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
குடும்ப கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெண்களின் ஆளுமைத் திறன் வளர்ப்பு, தாய் - சேய் நலம் காத்தல் உள்ளிட்ட பணிகளை தமிழகத்தில் செயல்படுத்தி வருவது குறித்து, சங்க தலைவர் சுஜாதா நடராஜன் விவரித்தார். அனைத்தையும் உன்னிப்பாக கேட்ட தே.மு.தி.க., எம். எல்.ஏ., அருண்பாண்டியன், 'இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏன் பேராவூரணி பக்கமெல்லாம் நடத்தக் கூடாது' என, கேள்வி எழுப்பினார்.இதைக்கேட்ட பார்வையாளர் ஒருவர், 'பொது நிகழ்ச்சிகள்ல குறட்டை விடற அரசியல்வாதிகள் மத்தியில, தொகுதி மக்கள் நலனுக்காக இவ்வளவு அக்கறையா கேள்வி கேக்கற எம்.எல்.ஏ.,வை பாராட்டணும் பா...' என, 'கமென்ட்' அடித்தார்.
'சீக்கிரம் அழிங்கப்பா...!'
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், 'போலீஸ் உதவும் மையம்' துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இதை, டி.ஐ.ஜி., சந்தீப்மித்தல் திறந்து வைத்தார். முன்னதாக, 'போலீஸ் உதவும் மையம்' என்பதற்கு பதிலாக, 'புறக்காவல் நிலையம்' (அவுட்போஸ்ட்) என, தவறுதலாக எழுதப்பட்டிருந்தது.இதைக் கண்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர், 'அவுட்போஸ்ட்' துவக்க அரசின் அனுமதி பெற வேண்டும். போலீஸ் உதவும் மையத்திற்கு அனுமதி தேவையில்லை. டி.ஐ.ஜி., வருவதற்கு முன், இதை சீக்கிரம் அழிங்கப்பா' என, பதறினார். உடனே, சம்பந்தப்பட்ட ஆட்கள் வரவழைக்கப்பட்டு, அவசர கதியாக அழிக்கப்பட்டது. அதன் மேல், 'போலீஸ் உதவும் மையம்' என, எழுதி சமாளித்தனர்.டி.ஐ.ஜி., புறப்பட்டுச் சென்றதும்,'நல்லவேளை... கடைசி நேரத்துல, தவறை அதிகாரி கண்டுபிடிச்சுட்டார்... இல்லைன்னா, நம்ம கதை கந்தல் தான்...' என, போலீசார் முணுமுணுத்தனர்.