
கோஷ்டியோ...
கோஷ்டி...!
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, உளுந்தூர்பேட்டை ராயல் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குமரகுரு, அரசு கொறடா மோகன், திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன.ஆனால், மோகன், 'குமரகுருவுடன் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்' என, அழைப்பாளர்களிடம், 'கறாராக' கூறிவிட்டார். இதை அறிந்த குமரகுருவும், 'மோகன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை' என, கூறிவிட்டார்.குழம்பி போன நிர்வாகிகள், மாற்று ஏற்பாடு ஒன்றை செய்தனர். உளுந்தூர்பேட்டை இப்தார் நிகழ்ச்சியில், குமரகுருவையும், சங்கராபுரம் கண் சிகிச்சை முகாமில் மோகனையும், திருக்கோவிலூர் உடல் ஊனமுற்றோர் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வெங்கடேசனையும் கலந்து கொள்ள வைத்து நிலைமையை சமாளித்தனர்.இதைக் கண்ட தொண்டர் ஒருவர், 'இனிமே, கட்சி ஆட்களை வைத்து, எந்த கட்சி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யக் கூடாதுடா சாமி...' என, 'மூச்சுவிட்டபடியே' கூறினார்.
'முனியாண்டி உண்டியலில்...!'சிவகங்கை அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்கு வருபவர்களிடம், சிசேரியனுக்கு, 1,000 ரூபாய், சுகப்பிரசவத்திற்கு, 500 ரூபாய், 'அன்பளிப்பு' பெறுகின்றனர். மருத்துவமனை ஊழியரின் குடும்பத்தினராக இருந்தாலும் விட்டு வைப்பதில்லை.இதில் பாதிக்கப்பட்ட ஒருவர், மேலிடத்திற்கு புகார் அனுப்பி விட்டார். இதனால், கலெக்டர் உத்தரவை அடுத்து, வார்டிற்கு சென்ற கண்காணிப்பாளர், சிகிச்சையில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
தகவல் சேகரிப்பதை அறிந்ததும், லஞ்சமாக பெற்ற பணத்தை மருத்துவமனை ஊழியர்கள், ஜன்னல் வழியாக, சிகிச்சையில் இருந்தவர்களிடம் கொடுக்க முயன்றனர்.அவர்கள், பணத்தை வாங்க மறுத்து, 'அருகில் உள்ள முனியாண்டி கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள்... அதிகாரிகளிடம் உங்களை காட்டிக் கொடுக்க மாட்டோம்...' என்றனர். அதன்படி, ஊழியர்கள் லஞ்ச பணத்தை முனியாண்டி கோவில் உண்டியலில் போட்டதால், நோயாளிகள் காட்டிக் கொடுக்கவில்லை.இதனால் நிம்மதியடைந்த ஊழியர்கள், 'பணம் போனாலும், வேலை தப்பிச்சதே...' என, நிம்மதி பெருமூச்சு விட்டனர்.