
'வசூலிக்க' இப்படியும் ஒரு வழி!
திருவள்ளூர் மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டம், மணவாளநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வந்தார். அப்போது, அவரை வரவேற்க கட்சி நிர்வாகிகள்
பட்டாசுகளை வெடித்தனர். நேராக திருமண மண்டபத்துக்குள் நுழைந்த ராமதாஸ், 'பட்டாசுகளை வெடித்து, காசை கரியாக்கியது யார்?' எனக் கேட்டார். அங்குள்ளவர்கள், மாநில துணை பொதுச் செயலர் பாலயோகியையும், மாவட்ட செயலர் வெங்கடேசனையும் கைகாட்டினர். 'பட்டாசு வெடித்ததற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் தான் கூட்டத்தில் பேசுவேன்' என, ராமதாஸ் கூறினார். இதையடுத்து, இருவரும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் பணத்தை அபராதம் செலுத்தினர். அதை பெற்றுக் கொண்ட பிறகே அவர் கூட்டத்தில் பேசினார்.
இதைப் பார்த்த கட்சித் தொண்டர்கள், 'இப்படி கூட வசூலிக்கலாம் போலிருக்கிறதே...' என, 'கமென்ட்' அடித்ததும், அங்கு கலகலப்பு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் தூக்கம்!
சட்டசபையில் போலீஸ் மானியக் கோரிக்கையில், முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பின் வரிசையில் இருந்த சில ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முன் இரவு அடித்த, 'உற்சாக பானம்' தந்த ஜோரில், தலையை தொங்கவிட்டு, நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், 'இந்தியா முழுவதும் இன்று போலீஸ் துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு, 91ம் ஆண்டு வித்திட்டதே நான் தான்...' என, முதல்வர் சொன்னதும், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மேஜையைத் தட்டி பாராட்டினர். திடீரென, மேஜையைத் தட்டும் ஒலி கேட்டதும், தூங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.,க்கள் பதறி எழுந்தனர். எல்லாரும் மேஜையைத் தட்டுவதைப் பார்த்து, என்ன, ஏது என்று தெரியாமலே மேஜையைத் தட்டினர்.இதைப் பார்த்த அதிகாரிகளும், நிருபர்களும் தலையைக் குனிந்தபடி சிரித்தனர்.