PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM

'ஊருக்கு தான் உபதேசம்!'
திருப்பூர் மாநகராட்சி, ஜீவநதி நொய்யல் சங்கம், நொய்யல் பண்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து நொய்யல் ஆற்றின் கரையில் மூன்று நாள் விழாவாக, திருப்பூர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியை நடத்தின.
நிறைவு விழாவில், மேயர் தினேஷ்குமார் பங்கேற்று பேசுகையில், 'திருப்பூரை, குப்பையில்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வீதிகளில், நீர் நிலைகளில் குப்பை கழிவுகளை வீசுவதை தவிர்க்க வேண்டும். 2026ல் துாய்மையான மாநகராட்சி என்ற பெருமையை திருப்பூர் பெற வேண்டும்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'அதெல்லாம் சரி... மாநகராட்சி நிர்வாகம், நீர்நிலைகளில் கழிவுநீரை விடுவதும், குப்பையை கொட்டுவதுமா இருக்கே... அதைப் பற்றி மேயர் எதுவும் பேசலையே...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'இவங்க எப்பவும் ஊருக்கு தான்
உபதேசம் பண்ணுவாங்க...' என, 'கமென்ட்' அடித்தபடி அங்கிருந்து நழுவினார்.
'விழுந்து வணங்குவாங்களே!'
சென்னை, புழல் மத்திய சிறையில் நடந்த பொங்கல் விழாவில், சிறைத்துறை டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள், டி.ஐ.ஜி.,க்கள் கனகராஜ், முருகேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.விழாவில், சிறை ஊழியர் ஒருவர், பயபக்தியுடன் பொங்கல் வைத்து படையலிட்டு, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தார். அவரை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள், 'ஷூ'வை கூட
கழற்றாமல், கற்பூரத்தை தொட்டு வணங்கி, பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.இதைப் பார்த்த சிறை கைதி ஒருவர், 'கற்பூர ஆரத்தியை காலில் ஷூவோட கும்பிடுறது தான் முறையா... முதல்ல இவங்களுக்கு ஒழுக்கத்தை
கற்றுத் தரணும் போலிருக்கே...' என, முணுமுணுக்க, மற்றொரு கைதி, 'திராவிட மாடல் ஆட்சிங்கிறதால தான் இப்படி கூலா நடந்துக்கிறாங்க... இதே ஆன்மிக ஆட்சியா இருந்தா, அதிகாரிகள் சாஷ்டாங்கமா விழுந்து வணங்குவாங்களே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.
'உஷாரா இருக்கணும் தம்பி!'
காஞ்சிபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்தில் நடந்த போது, அவரை வரவேற்கும் விதமாக, ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.மிடுக்காக ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு செய்த போது, ஒரு காவலரின் துப்பாக்கியில் இருந்து, கத்தி கழன்று கீழே விழுந்தது. இதை பொருட்படுத்தாமல், அந்த ஆயுதப்படை காவலர் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்தார்.
இதை கவனித்த இளம் நிருபர் ஒருவர், 'கழன்று விழுந்த கத்தி, யார் மீதாவது பட்டிருந்தால் என்ன ஆவது...?' என, அப்பாவியாய் கேட்க, மூத்த நிருபர் ஒருவர், 'அணிவகுப்பு நிகழ்ச்சியை கவர் செய்ய வந்தா நாம கூட உஷாரா இருக்கணும் தம்பி... இப்ப கத்தி கழன்று விழுந்த மாதிரி, நாளைக்கு துப்பாக்கி நம்மை நோக்கி வெடிச்சிட்டா, நிலைமை என்ன ஆகும்...' என, 'கமென்ட்' அடிக்க, அனைவரும் பீதியுடன் அங்கிருந்து
நழுவினர்.

