PUBLISHED ON : ஜூலை 18, 2026 02:26 AM

சிவகங்கை தொகுதிக்கு சமீபத்தில் வந்த காங்., - எம்.பி., கார்த்தி, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் சிலர் வெளியேறுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., இருக்க வேண்டும். அது ஒரு பாரம்பரியமான கட்சி. த.வெ.க.,வுக்கு யாரும் புதிதாக வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது; வேறு கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.
'த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை வைத்தே ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தலாம். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இவ்வளவு பேர் ராஜினாமா செய்வதை, தொகுதி மக்களுக்கு செய்கிற துரோகமாகத் தான் பார்க்கிறேன்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'த.வெ.க., கூட்டணியில் இருந்துட்டே, 'சேம் சைடு கோல்' போடுறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
