PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM

தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, கோவையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி துவக்கியுள்ளது. முதல் கட்டமாக, தரமான உணவு தயாரிக்க, அம்மா உணவக பணியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையால் சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர் கார்த்தி பேசும்போது, 'நம் நாட்டில், 516 வகை காய்கறிகள் விளைகின்றன. ஆனால், தமிழக மார்க்கெட்டுக்கு, 90 வகை காய்கறிகளே வருகின்றன. அதிலும் வெங்காயம், தக்காளி, கத்தரி, உருளைக்கிழங்கு என, ஏழு காய்கறிகளையே திரும்ப திரும்ப பயன்படுத்துகிறோம்.
'காய்கறிகளை அரைத்து மாவில் கலந்து, கலர் கலராக தோசை சுட்டு கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்; சத்தான உணவாகவும் இருக்கும்' என்றார்.
இதை கேட்ட மாநகராட்சி அதிகாரி ஒருவர், 'அம்மா உணவகத்திலும் இந்த மாதிரி உணவு வகைகளை அறிமுகப்படுத்தினா, ஏழைகள் மட்டுமல்லாம நடுத்தர மக்களும் வந்து சாப்பிடுவாங்களே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தோர் ஆமோதித்தனர்.
