PUBLISHED ON : ஏப் 04, 2026 03:38 AM

திருச்சி மாவட்டம், துறையூர் - தனி தொகுதியில், தி.மு.க.,வின் ஸ்டாலின் குமார் இரண்டாவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மூன்றாவது முறையாக களமிறங்கவும், ஆயத்தமாக இருந்தார்.
ஆனால், கூட்டணியில், துறையூர் தொகுதி, காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது; இதை கண்டித்து, 'துறையூர் தொகுதியை மீண்டும், தி.மு.க.,வுக்கே ஒதுக்க வேண்டும்' எனக் கோரி, அக்கட்சியின் நகராட்சி கவுன்சிலர்கள், சுதாகர், கார்த்திகேயன், நகர துணை செயலர் பிரபு ஆகியோர் தலைமையில், கட்சியினர், துறையூர் பஸ் ஸ்டாண்ட் முன், சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட, 20 நிமிடங்கள் நடந்த போராட்டத்தில், 'தொகுதியை மீண்டும் தி.மு.க.,வுக்கே ஒதுக்க வேண்டும்' என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்ய யாரும் முன்வராததால், அவர்களே கலைந்து சென்றனர்.
இதை பார்த்த ஒருவர், 'இவங்களை துாண்டிவிட்ட, எம்.எல்.ஏ., இந்த பக்கமே வரலையே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
