PUBLISHED ON : ஆக 07, 2025 12:00 AM

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், முக்குலத்தோர் மேல்நிலை பள்ளியில், அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.
பின் அவர் பேசுகையில், 'அறக்கட்டளை சார்பில், 10 ஆண்டுகளாக திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்பு முகாமில், 40,000க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
'இந்தியாவை பார்த்து, மற்ற நாடுகள் பயப்படுவதற்கு காரணம், அணு ஆயுதங்கள் அல்ல... நம்மிடம் உள்ள இளைய சக்தியை பார்த்து தான், உலக நாடுகளே பயப்படுகின்றன...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... இவரது கட்சியில் கூட, இவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் பார்த்து தானே சீனியர்களே பயப்படுறாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.